திருப்பதி: திருப்பதியில் நடைபெற்று வரும் கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி நகரின் மையப்பகுதியில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் ராமானுஜரால் இக்கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என கோயில் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடிகிறது.
தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டும், கடந்த 2-ம் தேதி இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 8-ம் நாளான நேற்று காலை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பலர் மிளகும், உப்பும் தேரின் மீது தெளித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்றிரவு குதிரை வாகனத்தில் கோவிந்தர் திருமாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவு நாளான இன்று சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை கொடியிறக்க நிகழ்ச்சி ஆகம விதிகளின் படி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.