மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக விழா இன்று (ஜூன் 9) நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் தொடங்கினர். பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு சண்முக வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் வரையிலும் பக்தர்கள் சுமந்து வந்த பாலில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவடிகள் எடுத்தும், பறவைக் காவடி, அழகு குத்தியும் பல்வேறு வகையில் தங்களது நேத்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அரோகரா கோஷங்களுடன் முருகனை தரிசித்தனர். 16 கால் மண்டபம் அருகே ஏராளமான பக்தர்கள் பால் குடத்துடன் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொலைவிலிருந்து பால்குடம் எடுத்து நடந்து வரும் பக்தர்களுக்காக கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க, தண்ணீர் இறைப்பான் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
மேலும், 16வது மண்டபம் முதல் சன்னதி வரை தேங்காய் நார் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பூக்குழி இறங்குமிடத்தில் அருகே தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.