ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (ஜூன் 9, 2025) மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரிழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். முன்னதாக, குண்டுவெடிப்பில் கிரிபுஞ்சே படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து பேசிய துணை முதல்வர் விஜய் சர்மா, “கோண்டா-எர்ரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே ஐஇடி குண்டுவெடிப்பில் காயமடைந்து சுக்மா ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே தனது உயிரைத் தியாகம் செய்தார். அவர் ஒரு துணிச்சலான ஜவான், அவருக்கு பல துணிச்சலான விருதுகள் வழங்கப்பட்டன. இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம். இச்சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டுகளை தேடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை காவல்துறை ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்த தகவல்களின்படி, “சுக்மா மாவட்டத்தின் கோண்டா பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே, கோண்டா-எர்ரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே நடந்த ஐஇடி குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்தார்.
ஜூன் 10 அன்று சிபிஐ (மாவோயிஸ்ட்) பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், எந்தவிதமான நக்சலைட் சம்பவத்தையும் தடுக்க கூடுதல் எஸ்பி ஆகாஷ் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. காயமடைந்த அனைவரும் கோண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில், கூடுதல் எஸ்பி ஆகாஷ் ராவின் நிலை மிகவும் மோசமாகவும் கவலைக்கிடமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்த மற்றவர்கள் தற்போது ஆபத்தில் இல்லை. சிறந்த சிகிச்சைக்காக கூடுதல் எஸ்பி ஆகாஷ் ராவை உயர் மருத்துவ மையத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று கூறப்பட்டிருந்தது.