காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, சகோபுர வீதியுலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டு விழா மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளல், செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து இந்திர விமானத்தில் உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல், தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சகோபுர வீதியுலா, 5 தேர்கள் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க காக வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக, செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்தில் இருந்து யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் கு.அருணகிரிநாதன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். பிரம்மோற்சவ விழா, சனிப்பெயர்ச்சி விழாவின்போது மட்டுமே சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.