வேலூர்: வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், வேலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தையொட்டியுள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயரமுள்ள தீர்த்தகிரி மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே 3வது அதிக உயரமுள்ள (92 அடி) மிகப்பிரமாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார்.
தென்வடக்கு திசையை நோக்கியவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை, மலையின் உச்சியில் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. தற்போது திருப்பணிகள் முடிந்து திருக்கோயில் மற்றும் 92 அடி உயரமுள்ள முருகன் சிலையின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காலை முதலாவது யாக பூஜைகள் தொடங்கின. இதையடுத்து, இன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விமானம், மூலவர் கோபுரங்கள், பரிவார தேவதைகளுக்கும், காலை 10.15 மணியளவில் தீர்த்தகிரி வடிவேல் முருகன் மற்றும் 92 அடி உயர முருகன் சிலைக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முருகன் சிலைக்கு ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு) ப.கார்த்திகேயன் (வேலூர்) மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை பயபக்தியோடு, அரோகரா முழக்கத்தோடு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாண வேடிக்கையும், மகா அபிஷேகம் அலங்கார தரிசனமும், திருக்கல்யாண வைபவமும், பின்னர் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை குழுவினரின இசை கச்சேரியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், அறங்காவலர் குழு துணைத்தலைவர் ஏழுமலை மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.