தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய மொழி பாடங்களையும், பகுதி-3-ல் முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் பயில்கின்றனர். இந்த நிலையில், இசைப் பள்ளி மாணவர்கள் பகுதி 3-ல் முதன்மை பாடம், துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை பயில்கின்றனர்.
அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் அவர்கள் தேர்ச்சி பெறும் பட்சத்தில், பகுதி 3-ல் அவர்கள் பயின்றதை சிறப்பு நிகழ்வாக முதன்மை பாடங்களாக கருதலாம். அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என அரசு தேர்வு துறை சான்றிதழ் வழங்கலாம்.
அதேபோல, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நேரடியாக இசைப் பள்ளிகளில் 3 ஆண்டு படித்து முதன்மை பாடங்கள் (தாள்-1, 2), துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு (கலை, தொழில் பிரிவுகள் மட்டும்) தேர்ச்சிக்கு இணையானது என அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கலாம்.
மாணவர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்பை தடையின்றி பெற வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொழி தேர்வுகள் தங்களுக்கு தேவையில்லை என்று கருதும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மாவட்ட இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழை வழக்கம்போல தொடர்ந்து வழங்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.