இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் குர்பானி வழங்கி மகிழ்ந்தனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜா 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல நேற்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முக்கிய பள்ளி வாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்களில் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் நேற்று புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன், அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். தொழுகை முடிந்ததும் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இறைச்சியை குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவரான நடிகர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவி்த்துள்ளார். அதில், உன்னத தியாகத்தைப் போற்றும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நந்நாளில் அனைவரிடத்தும் சமத்துவம், சகோதரத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதியேற்போம், என தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பாரிமுனை, எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகம், தீவுத்திடல், பெரியமேடு, ஆயிரம் விளக்கு, ஐஸ்ஹவுஸ், மண்ணடி, மயிலாப்பூர் கச்சேரி சாலை, முகப்பேர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்காக பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பல இடங்களில் இறைச்சியும், சில இடங்களில் மட்டன், சிக்கன் பிரியாணியும் அப்பகுதியினருக்கு வழங்கப்பட்டது.