மூலவர்: தான்தோன்றீஸ்வரர் அம்பாள்: குங்குமவல்லி தல வரலாறு: சூரவாதித்த சோழ மன்னன், காந்திமதி என்ற நாககன்னிகை மீது விருப்பம் கொண்டு, நாகலோகத் தலைவர் ஆதிசேஷனின் அனுமதி பெற்றுஅவளை மணந்து கொண்டான். சிவபக்தையான காந்திமதி திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை தினமும் வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பின் கர்ப்பவதியான அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறி வழிபாடு செய்தாள்.
அவள் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தானே அங்கு தோன்றி, “மகளே.. காந்திமதி.. கலங்க வேண்டாம். உனக்கு பிரசவம் ஆகும்வரை நான் மலையடிவாரத்திலேயே அமர்வேன். நீ என்னை அவ்விடத்திலேயே வணங்கலாம். நான் தான்தோன்றீஸ்வரர் என்ற அழைக்கப்படுவேன். பார்வதிதேவி உன்னை போன்ற பெண்களுக்கு தாயாக இருந்து பிரசவம் பார்ப்பாள். அவள் குங்குமம் காப்பாள், குங்குமவல்லி என்று அழைக்கப்படுவாள்” என்று திருவாய் மலர்ந்தார். அதன்படி ஈசன் அருளால் காந்திமதி குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
கோயில் சிறப்பு: தெற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் தில்லைகாளிக்கு பவுர்ணமியன்று சிறப்பு பூஜை, யாகம் நடைபெறுகிறது. குங்குமவல்லிக்கு ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளி தாயுள்ளத்துடன் பக்தர்களை காத்தருள்கிறார்.
பிரார்த்தனை: கர்ப்பிணிகள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக, இங்கிருந்து வளையல் பிரசாதம் பெற்று அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு 41 நாட்கள் கழித்து, மீண்டும் கோயிலுக்கு வந்து அம்பிகைக்கு வளையல் மாலை அணிவிக்கின்றனர். அமைவிடம்: திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் வழியில், ருக்மணி தியேட்டர் நிறுத்தம் அருகே உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 -11, மாலை 4-8 மணி வரை.