நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இறைதூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி, நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காவில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அப்போது காசாவில் அமைதியும், சமாதானமும் நிலவ பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொழுகைக்குப் பின், ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பின்னர், ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு, அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை உறவினர்கள், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும்கொடுத்துவிட்டு, 3-வது பங்கை தாங்கள் பயன்படுத்திக் கொண்டனர்.