ராஜமவுலி இயக்கத்தில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ‘பாகுபலி: தி பிகினிங்’ (முதல் பாகம்) வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. அதிக வசூல் செய்த டப்பிங் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ‘பாகுபாலி’ படத்தை ரிரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.