பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.
பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் மருத்துவர் ரத்தினம் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவர் ரத்தினத்தின் மறைவு பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினகரன் இரங்கல்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம், வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இச்செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்பட்ட ரத்தினத்தை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
வேல்முருகன் இரங்கல்: தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்து ரூபாய் மருத்துவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய மருத்துவர் ரத்தினம் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சேவையாற்றியிருகிறார்.
குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்களுக்கு பல ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் தாய்மார்களுக்கு வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்திருக்கிறார். கரோனா காலத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகையே பெற்றுக்கொள்ளாமல், பல லட்சங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்.
அவரது மறைவு என்பது தமிழ்ச் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மறைவிற்கு இரங்கலைக் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.