ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் சனிக்கிழமை காலை அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகும். சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாக பெருந்திருவிழாவில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் ஸ்ரீ அம்மையப்பர் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக அம்மையப்பர் பிரியாவிடை உடன் ராஜ அலங்காரத்திலும், அன்னை தவம்பெற்ற நாயகி மணக்கோலத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
அப்போது பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர். இதில் விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை சேத்தூர் ஜமீன்தார் பரம்பரை அறங்காவலர் துரைரத்னகுமார், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்தனர்.