சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், போரூர் – பூந்தமல்லி வரையிலான மற்றொரு பாதையில் (கீழ் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான ஒரு பாதையில் (மேல் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்ரல் இறுதியில் தொடங்கி நடைபெற்று வந்தது. மற்றொரு பாதையான போரூர் – பூந்தமல்லி பாதையில் (கீழ் பாதையில்) உயர்நிலை மின் பாதை, தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
இந்நிலையில், போரூர் – பூந்தமல்லி வரையிலான மற்றொரு பாதையில் (கீழ் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது. இது பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த கீழ் பாதையில் 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. இந்த வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படும். அடுத்த மூன்றரை மாதங்களில் சிக்னல், இழுவைத் திறன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.