காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று 5 தேரோட்டம் நடைபெற்றது. திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 30-ம் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, ஜூன் 4-ம் தேதி இரவு சகோபுர வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
மற்றொரு முக்கிய நிகழ்வான 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜ சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், எம்எல்ஏ பி.ஆர்.சிவா, புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம், நிர்வாக அதிகாரி(கோயில்கள்) கு.அருணகிரிநாதன், மாவட்ட எஸ்எஸ்பி லட்சுமி சவுஜன்யா உள்ளிட்டே பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் வலம் வந்த தேர்கள் மீண்டும் நிலையை வந்தடைந்தன. தொடர்ந்து இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார். விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இன்று(ஜூன் 7) இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல் மற்றும் சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளும் சகோபுர வீதியுலா, நாளை(ஜூன் 8) இரவு தெப்போற்சவம் நடைபெறுகிறது.