வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
பாஜக-வைச் சேர்ந்த நமச்சிவாயம் முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளை திருமணம் செய்தவர் என்பதால், அவருக்கு மருமகன் முறை. 2011 சட்டப்பேரவை தேர்தலில் வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட இவர், வெற்றிபெற்று அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 2016-ல் மீண்டும் வில்லியனூரில் போட்டியிட்ட இவரை முதல்வர் வேட்பாளர் என பிரகடனம் செய்தது காங்கிரஸ்.
அந்தத் தேர்தலிலும் நமச்சிவாயம் வெற்றிபெற்றாலும் அவரை முதல்வர் நாற்காலியில் அமரவிடவில்லை காங்கிரஸ். அவருக்குப் பதிலாக நாராயணசாமி முதல்வரானார். நமச்சிவாயம் பொதுப்பணித்துறைக்கு அமைச்சரானார். முதல்வர் பதவியை தட்டிப்பறித்ததால் காங்கிரஸ் மீது வருத்தத்தில் இருந்த நமச்சிவாயம், அந்த ஆட்சியின் இறங்கு முகத்தில் காங்கிரஸுக்கு குட் பை சொல்லிவிட்டு பாஜக-வில் இணைந்தார்.
2021 தேர்தலில் வில்லியனூருக்குப் பதிலாக மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார் நமச்சிவாயம். அதற்காக அந்தத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கனூர் பகுதியில் குடியேறியவர், அந்தத் தேர்தலில் 2,750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-வை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார். தேர்தலுக்குப் பின் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைச்சரவையில் உள்துறைக்கு அமைச்சரானார் முதல்வரின் மருமகனான நமச்சிவாயம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருக்கனூரில் இருந்து தனது ஜாகையை கொடாத்தூருக்கு மாற்றிய நமச்சிவாயம், அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட மணவெளியில் உள்ள தனது வீட்டுக்கே மாறினார்.
மணவெளியில் இருந்துகொண்டு மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மக்கள் சேவைக்கு போக வர இருந்த நமச்சிவாயத்தை தொகுதி மக்கள் நினைத்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை என்ற முணுமுணுப்புக் கிளம்பியது. இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் நமச்சிவாயத்தையே வேட்பாளராக நிறுத்தியது பாஜக தலைமை. ஆனால், அமைச்சராக இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 516 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டார்.
பாஜக-வில் தனித்த செல்வாக்குடன் வலம் வந்த முன்னாள் காங்கிரஸ்காரரான நமச்சிவாயத்தை இந்தத் தோல்வி ரொம்பவே சிந்திக்கவைத்துவிட்டது. இந்திரா நகர் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் நமச்சிவாயத்துக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக, அவரது சொந்தத் தொகுதியான மண்ணாடிப்பட்டிலும் வைத்திலிங்கத்தைவிட 595 வாக்குகள் குறைவாகவே பெற்றார். நமச்சிவாயம் வசித்த வி.மணவெளி வாக்குச் சாவடியிலேயே அவருக்கு 58 வாக்குகள் கம்மி என்பது கூடுதல் அதிர்ச்சி.
இதனால், தனது பழைய செல்வாக்கு சரிந்துவிட்டதோ என பதறிய நமச்சிவாயம், மீண்டும் தனது வீட்டை மண்ணாடிப்பட்டு தொகுதிக்கே மாற்றி தொகுதி மக்களுக்கு நெருக்கமாக இருக்க முடிவெடுத்தார். இதற்காக திருக்கனூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் அண்மையில் கணபதி ஹோமம் நடத்தி குடியேறினார்.
இந்த வீட்டுக்கு வந்த பிறகு சொந்தத் தொகுதிக்குள் அடிக்கடி தென்படும் நமச்சிவாயம், தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில் திருப்பணிகளுக்கு நிதியளித்தல், அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்தல் என மக்களோடு நெருக்கமாகி வருகிறார். மக்களவைத் தேர்தலில் தனக்கு மக்கள் அளித்த தீர்ப்பு சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்துவிடக்கூடாது என்பதற்காக நமச்சிவாயம் முன்கூட்டியே காரியமாற்ற களமிறங்கி இருப்பதாக பாஜக-காரர்களே இப்போது காதைக்கடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “மண்ணாடிப்பட்டில் உள்ள புதிய வீட்டில் தான் இப்போது வசிக்கிறேன். 2026-ல் கட்சித் தலைமையின் அனுமதியுடன் நிச்சயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் தான் போட்டியிடுவேன். தொகுதிக்குள் இன்னும் தேர்தல் பணிகளை தொடங்கவில்லை என்றாலும் மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்கின்றன. வரும் தேர்தலில் பாஜக அதிகமான இடங்களைப் பிடிக்குமானால் என்னை முதல்வராக்குவது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்” என்றார்.