சிவகாசி: சிவகாசி காரனேசன் சந்திப்பில் பட்டாசுத் தொழிலாளியின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நினைவுச் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சார்பில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பட்டாசு தொழிலாளியின் நினைவு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விருதுநகர் சாலையில் நகரின் நுழைவுப் பகுதியான காரனேசன் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை உருவாக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
பட்டாசுத் தொழிலாளி நினைவுச்சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மேயர் சங்கீதா, சார் ஆட்சியர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிவகாசி அறிவுசார் மையத்தில் காமிக்ஸ் நூலகம், சிவகாசி அரசுக் கல்லூரியில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்.
தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சிவகாசியில் அடையாளமான பட்டாசு தொழிலாளர்களை போற்றும் வகையில் நகரின் நுழைவு வாயிலில் சிலை திறக்கப்பட்டு உள்ளது. தொழிலில் மட்டுமல்ல, கல்வியிலும் சிவகாசி முன்னோடியாக உள்ளது.
சிவகாசி அரசு கல்லூரியில் அடிக்கல் நாட்டிய 5 மாதங்களில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சிவகாசி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உயர் கல்வி சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு குறித்து கல்லூரிகளில் பாடப்பிரிவும், பல்கலை கழகங்களில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது” என்றார்.