புதுடெல்லி: கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார். கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து கூறினேன். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள். இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு கனடா அரசு சார்பில் அழைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாதது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதும் கவனிக்கத்தக்கது.