புதுடெல்லி: ‘நீங்கள் என்னை தப்பியோடியவன் என்று கூறலாம்… ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல’ என்று இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். இங்கிலாந்தில் உள்ள அவர், இந்தியாவில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் குறித்தும், தனது சட்டப் போராட்டங்கள், தனது விமான நிறுவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தான் வெளியேறியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய் மல்லையா, “மார்ச் 2016-க்குப் பிறகு நான் இந்தியாவுக்கு திரும்பவில்லை. இதற்காக நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறுங்கள். ஆனால், நான் ஓடிப்போகவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் காரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றேன்.
நான் இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்க விரும்பினால், அழையுங்கள். ஆனால் ‘மோசடிக்காரன்’ என்ற பதம் எனக்கு எப்படி பொருந்தும்?” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வெளிநாட்டில் தங்கியிருப்பது சட்ட சிக்கல்களை மோசமாக்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த மல்லையா, “இந்தியாவில் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கான உத்தரவாதம், நான் கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உத்தரவாதம் இருந்தால், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், அப்படி இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை.” என்று கூறியுள்ளார்.
நியாயம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டால், நீங்கள் இந்தியா திரும்புவீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு உறுதியளிக்கப்பட்டால், நிச்சயமாக, நான் அதைப் பற்றி தீவிரமாக யோசிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் மல்லையா, “நீங்கள் எப்போதாவது லெஹ்மன் பிரதர்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகளாவிய நிதி நெருக்கடி பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2008-ல் உலகளாவிய நிதி நெருக்கடி இந்தியாவைப் பாதிக்கவில்லையா? நிச்சயமாக, அது பாதித்தது. ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டது. பணம் நின்றுவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டது.
இதனால், அப்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜியை நான் சந்தித்தேன். எனக்கு இருக்கும் பொருளாதார பிரச்சினை குறித்து கூறினேன். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானங்களைக் குறைக்க வேண்டும், விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், ஏனெனில் இந்த மந்தமான பொருளாதார சூழ்நிலையில் என்னால் செயல்பட முடியாது.” என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், ஊழியர்களைக் குறைக்க வேண்டாம் என்றும் வங்கிகளிடமிருந்து ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறினார்.
அப்படித்தான் வங்கிகளிடம் இருந்து நாங்கள் கடன் வாங்கினோம். நாங்கள் கடன் கேட்ட நேரத்தில், நிறுவனம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை.” என்றார்.
ரூ.11,101 கோடி கடன்: பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகளிடம் இருந்து பெற்ற ரூ.11,101 கோடி கடன் தொடர்பான வழக்கில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரியில், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மல்லையா, உண்மையில் தான் வழங்க வேண்டிய தொகை ரூ. 6,200 கோடி மட்டுமே என்றும், ஆனால், வங்கிகள் ஏற்கனவே ரூ.14,000 கோடியை வசூலித்துவிட்டதாகவும் தெரிவித்தார். கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பான விரிவான விவரத்தை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றத்தை கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். தேவதாஸ் தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேநேரத்தில், 2012-ல் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது தொடர்பான நிதிக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.