புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் இன்று இணைந்தனர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியது: “புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும். ஆனால் அதனை ஏலம் விடாமல் நிறுத்தி வைத்தனர். ஒதியஞ்சாலை அண்ணா திடலில் கடைகள் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடை ஒதுக்கீடு செய்து சாவி கொடுத்துள்ளனர்.
தற்போது வியாபார சங்கத் தலைவராக உள்ள எம்எல்ஏ-யே 4 பேரை அனுப்பி கடைகளை உடைக்கச் சொல்கிறார். அவரே பஞ்சாயத்தும் செய்கிறார். மக்களவைத் தேர்தலில் சீட்டு கேட்டார். சுயேச்சை, பாஜக, மார்ட்டின் என்று சொல்லி உங்களை (வியாபாரிகள்) வைத்து அவர் வியாபாரம் செய்கின்றார். காங்கிரஸ் கட்சி எப்போதும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம். வட்டிக்கடைகளில் நகைகளை வைத்தால் அது உண்மையான நகையாக வருமா என்பது சந்தேகம் தான். இதுபோன்று ஏமாற்றும் உலகம் தான் இன்று இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.