பாட்னா: பிஹாரில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் புதிய மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி முதல்வர் நிதிஷ் குமாருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் மிகப் பெரிய போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘மொத்த இடஒதுக்கீட்டை 85 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்கான முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த மசோதா அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதித்துறை மறு ஆய்விலிருந்து பாதுகாக்கப்படும்.
முந்தைய மகாகத்பந்தன் அரசாங்கத்தில் எனது பதவிக் காலத்தில், 2023-ஆம் ஆண்டு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இது 75 சதவீத இடஒதுக்கீடு கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தது. இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசிக்கு 65 சதவீதம் மற்றும் இடபுள்யூஎஸ்-க்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்த 75 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேஜஸ்வி தனது கடிதத்தில் தமிழகத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பின்னர் அது நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. எனவே 85% இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய அதே வழியைப் பின்பற்றுமாறு நிதிஷ் குமாருக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், “நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நீங்களும் உங்கள் அரசாங்கமும் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் தாமதப்படுத்தி, விலகுகிறீர்கள் என்பது மக்களுக்கு புரியும். பிஹார் அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றத் தவறினால் 90 சதவீத பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக, நான் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்குவேன்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், மாநிலத்தின் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வரம்பை 85 சதவீதமாக உயர்த்துவதை விரும்பவில்லையா?” தேஜஸ்வி தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.