தமிழின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்று ‘நாயகன்’. அந்தப் படத்துக்குப் பின் இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்ததால் ‘தக் லைஃப்’ மீதான எதிர்பார்ப்பு பெட்ரோல் மீது பரவும் தீயாய் பலருக்கும் பரவியிருந்தது. கதை, கதாபாத்திரங்கள், மேக்கிங், மேக்கப், ஒளிப்பதிவு, இசை என திரைப்பட ஆளுமைகளும் ரசிகர்களும் எப்போதும் நினைவுகூர்ந்து கொண்டாடித் தீர்க்கும் படம் ‘நாயகன்’. 38 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி அதுபோன்ற ஒரு மேஜிக்கை ‘தக் லைஃப்’ படத்தில் செய்யத் தவறிவிட்டதாக பலரும் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது.
உதாரணமாக, ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்யும் காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சிக்குப் பிறகு படத்தில் வரும் கமலின் முகத்தில் வலதுபக்க புருவத்தில் ஒரு தழும்பு ஏற்பட்டிருக்கும். அது அந்தப் படத்தின் கதையோட்டத்தில் கமலின் ஒவ்வொரு தோற்றத்திலும் பத்திரமாக கடத்திச் செல்லப்பட்டிருக்கும்.
இதுபோன்ற சின்னச் சின்ன தாக்கங்கள்தான் அந்தப் படத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூர வைத்திருக்கிறது. ஆனால், காயத்தழும்பை அத்தனை பத்திரமாக பாதுகாத்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி ‘தக் லைஃப்’ படத்தில் இத்தனை லாஜிக் மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தது பலரது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
அதேபோல், ‘நாயகன்’ படத்தில் தன்னை அடித்து துவைத்த காவல் துறை அதிகாரியைப் பார்த்து ‘நான் அடிச்சா நீ செத்துடுவ’ என கமல் சொல்லும் அந்த ஒற்றை வசனம், சக்திவேல் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த கோபத்துடன் கூடிய வீரத்தை வெளிப்படுத்தியிருக்கும். ‘தக் லைஃப்’படம் முழுக்க தேடினாலும் கமல்ஹாசனுக்கு அப்படி ஒரு டயலாக் இல்லை.
‘நாயகன்’ படத்தில், அந்தக் காவல் துறை அதிகாரியை அடித்துக் கொல்லும்போது வரும் சண்டைக்காட்சி மற்றும் மனைவி சரண்யாவை கொன்றவர்களை கொலை செய்யும் காட்சியின்போது வரும் சண்டையைத் தவிர பெரிய சண்டைக் காட்சிகளே இருக்காது. ஆனால், படத்தில் வரும் காட்சிகள், வசனங்களை வைத்தே கமலை தாராவி பகுதியின் மிகப் பெரிய தாதாவாக கட்டமைத்திருப்பார் மணிரத்னம்.
கடத்தலும், கட்டப்பஞ்சாயத்துகளும் ‘நாயகன்’ படத்தில் வரும் கமலின் தொழில் என்பதும் எளிதாக விளக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘தக் லைஃப்’ படத்தில் கமல் சிறையில் இருக்கும் காட்சிகளில் வரும் பாடல் காட்சியில் ஒன்றிரெண்டு சம்பவங்கள் காட்டப்படுகின்றன, அவ்வளவுதான். அது ரங்கராய சக்திவேல் மற்றும் அவரது குழுவினரை புரிந்துகொள்ள போதுமானதாக இல்லை.
‘நாயகன்’ படத்தில் பாலியல் தொழிலாளியான நாயகி சரண்யாவை மீட்டு, கமல் திருமணம் செய்து கொள்வார். ‘தக் லைஃப்’ படத்தில் பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் இருந்து மீட்கும் த்ரிஷாவை ஆசை நாயகியாக கமல் வைத்துக்கொள்கிறார். இந்த வரம்புமீறிய உறவு, கமலின் மனைவி அபிராமிக்கும் தெரிந்திருந்தும், அவரோடு செல்லச் சண்டை மட்டும் போடுவதாக காட்டியிருப்பது அபத்தம்.
‘நாயகன்’ படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அந்தப் படத்தின் கதையோட்டத்துக்கு ஆகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கும். ‘தக் லைஃப்’ படத்தின் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக, ‘முத்த மழை’ பாடலில் யாருடைய வெர்ஷன் சிறப்பானது என்ற இணையத்தில் நடந்த வார்த்தைப் போரின் சுவடுகள் இன்னும் விரவிக்கிடக்கின்றன. ஆனால், அந்தப் பாடலே படத்தில் இல்லாததுதான் சோகம்.
அதேபோல், ‘ஜிங்குச்சா’ பாடல் மட்டுமே கதையின் தேவை கருதி சில நிமிடங்கள் நீடிக்கிறது. மற்றதெல்லாம் மின்னல் வேகத்தில் வந்து மறைகின்றன. அதோடு, படத்தின் பின்னணி இசை எதுவுமே எடுபடவில்லை. சிம்புவின் அறிமுகக் காட்சித் தவிர, வேறெந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளும்படி ஒர்க் அவுட் ஆகவில்லை. ‘நாயகன்’ படத்தில் வரும் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலைப் போல, ‘தக் லைஃப்’ படத்தில் ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடல் ஆங்காங்கே வருகிறது, பெரிதாக தாக்கம் ஏதும் தராமல்.
‘நாயகன்’ படத்தில் கமல் அடித்துக் கொல்லும் காவல் துறை அதிகாரியின் மனநலம் குன்றிய மகன்தான் இறுதிக்காட்சியின் கமலை சுட்டுக் கொலை செய்வார். ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் தனது தந்தையைக் கொன்றது கமல்தான் என்று பிறர் சொல்வதைக் கேட்டு, அவரைக் கொலை செய்ய முயற்சி செய்வார் சிம்பு.
‘நாயகன்’ படத்தில் அஜித் கேல்கர் (காவல் அதிகாரி மகன்), டெல்லி கணேஷ், ஜனகராஜ், நிழல்கள் ரவி, கார்த்திகா, சரண்யா, நாசர், குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மறுக்கும் டாக்டர், என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதைக்குமான நெருக்கம், பார்வையாளர்களுக்கு எளிதாக கனெக்ட் ஆகும் வகையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அலி பைஸல், சேத்தன் என இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் ‘தக் லைஃப்’ படத்தில் அழுத்தமாக எழுதப்படவில்லை.
மும்பையின் தாராவி பகுதிதான் ‘நாயகன்’ படத்தின் கதைக்களம். ‘தக் லைஃப்’ படம் டெல்லி, ஜெய்சல்மார், நேபாளம், கோவா, திருச்செந்தூர் என பல்வேறு நிலப்பரப்புகளில் நடக்கிறது. இதுதவிர மணிரத்னத்தின் சிக்னேச்சர் பிராப்பர்டிகளான மழை, ரயில், கடல், காவல் துறை, சிறை என அனைத்தும் தட்டுப்படுகின்றன. ஆனால், அது எதுவும் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை.
‘நாயகன்’ படத்தில் 5 பாடல்கள். ‘தக் லைஃப்’ படத்தில் 9 பாடல்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை அடுத்து சின்மயி குரலில் ‘முத்த மழை’ பாடலும் தற்போது ஆடியோ ட்ராக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் தீ பாடியிருந்தார். இதே பாடலை ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியிருந்தார். இது பலரையும் ஈர்த்தது. இதனால், இவர்கள் இருவர் பாடிய வெர்ஷனில் எது சிறந்தது என்ற விவாதம் கிளம்பியது.
‘தக் லைஃப்’ படம் பார்த்தபோதுதான், அந்தப் பாடல் எந்த இடத்தில் வருகிறது என்பதை ஊகிக்க முடிந்தது. சிவப்பு விளக்கு பகுதியில் த்ரிஷாவின் அறிமுகக் காட்சிக்கான பாடலாக அது அமைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. அந்தக் காட்சியில் வரும் த்ரிஷாவையும் காட்சி அமைப்பையும் பார்த்தால், உங்களுக்கும் புரியும் அந்தப் பாடலுக்கு தீ-யின் குரல்தான் பொருத்தமாக இருக்கும் என்பது.
அப்படியே ‘நாயகன்’ பாடல்களுக்குச் சென்றால், அந்தப் படத்தில் 5 பாடல்கள். அதில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலும் ஒன்று. படத்தின் மற்ற பாடல்களை இளையராஜா, மனோ, சித்ரா, சுசிலா, டி.எல்.மகாராஜன் பாடியிருப்பார்கள். ஆனால், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பழம்பெரும் பாடகியரான கே.ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரியும் பாடியிருப்பார்கள். கமல் சிவப்பு விளக்குப் பகுதிக்குச் செல்லும்போது வரும் இந்தப் பாடல் ஜமுனாராணி, ராஜேஸ்வரியின் மழலைக் கொஞ்சும் குரலில் ஒலிக்கும்.
இது விரசமான படக் காட்சிகளில் இருந்து நம்மை விலக்கி அந்தக் கொஞ்சும் குரல்களை கவனிக்க வைத்திருக்கும். அதுபோலத்தான், ‘தக் லைஃப்’ படத்திலும், பாவாடை சட்டையும், ரிப்பன் கட்டிய இரட்டை ஜடையுடன் வரும் த்ரிஷாவிடம் இருந்து நம்மை திசைத்திருப்ப, ‘முத்த மழை’ பாடல் தீ-யின் குரலில் பதிவு செய்யப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அப்பாடல் திரையில் இடம்பெறாதது சோகமே.
‘நாயகன்’ படத்தில் வரும் சக்திவேல், மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்துப் போராடுவார். அதனால்தான் 38 ஆண்டுகள் கழித்தும் அவர் நினைகூரப்படுகிறார். ரங்கராய சக்திவேல் தனது குடும்பம், மனைவி, காதலி, பொறாமை, ஈகோ, சுயநலம் என தன்னை சுருக்கிக்கொள்கிறார். இதுதான் சக்திவேலுக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் ஆன வித்தியாசம்.
திரையுலகினர், உதவி இயக்குநர்கள், திரைப்படத் துறை மாணவர்கள், சினிமா ரசிகர்கள் என ‘நாயகன்’ படம் ஒவ்வொருவர் மனதிலும் மணிரத்னம் – கமல் கூட்டணிக்காக விரித்து வைத்திருந்த ரத்தினக் கம்பளத்தை ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் இருவரும் சேர்ந்து மடித்து வைத்துவிட்டனர் என்பதே படம் பார்த்த பலரது ஆதங்கமாக உள்ளது. ஆக, ‘நாயகன்’ எப்போதுமே தங்கம் என்றால், ‘தக் லைஃப்’ வெறும் தகர டப்பாதான்!