புதுடெல்லி: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாசத் பூனவல்லா சாடியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பூனவல்லா, “பெங்களூருவில் நாம் பார்த்தது, அரசால், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவே. அதற்கு முதல்வரும், துணை முதல்வருமே நேரடி பொறுப்பு. அவர்களே முதன்மை குற்றவாளிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு பதிலாக மற்றவர்கள் மீது பழி போடுவதையே நாம் பார்க்கிறோம். 24 மணி நேரத்துக்கு முன்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காவல்துறை அற்புதமாக வேலை செய்தது, அவர்கள் சிறப்பாக வேலை செய்திருந்தனர் என்று கூறி, அவர் கூட்டத்தின் மீது பழியைச் சுமத்துகிறார்.
முதல்வரும் ஏதோ ஒன்றைச் செய்ய முயல்வதை நாம் பார்க்கிறோம். 24 மணி நேரத்துக்குள் யாரோ ஒருவர் மீது பழியை சுமத்த தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் தலைமைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆர்சிபி என்பது தேசிய அணியா என்ன? அவர்கள் தேசிய போட்டியிலா வென்றிருக்கிறார்கள்?
பின்பு ஏன் 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விதான சவுதாவில் விழா நடத்த அனுமதி அளித்ததா? யார் அனுமதி கொடுத்தது. விமான நிலையத்தில் இருந்து அவர்களை வரவேற்று, கோப்பையை முத்தமிட்டு, கொடியை அசைத்து புகைப்படங்கள் எடுத்து பாராட்டு தெரிவிக்க முயன்றவர் யார்? உயிரிழப்பு நிகழ்ந்த பின்பும், நிகழ்ச்சியைத் தொடரும் முடிவினை எடுத்தது யார்?
ஆக இது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், வேறொருவரை பலியாக்குவதற்குமான மற்றுமொரு முயற்சி. இப்போது ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவர் ஏன் மற்றவர்கள் மீது சுமத்தும் பொறுப்புக்கூறலை, பெங்களூரு சம்பவத்தின் முதன்மை குற்றவாளிகளான சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் மீதும் சுமத்தக்கூடாது? அவர்கள் இருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பழியை அடுத்தவர் மீது சுமத்துகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்காக ஜுன் 4ம் தேதி புதன்கிழமை அன்று விதான சவுதா வளாகத்திலும், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் வெற்றி விழா நடைபெற்றது. சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.