புதுடெல்லி: தீவிரவாத சதி தொடர்பான வழக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக பல்வேறு தீவிரவாத அமைப்புகள், அவற்றுக்கு உதவி செய்தவர்கள் மீது ஜம்முவில் கடந்த 2022-ல் என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தின் ரெபன் நில்தூரா, செக்-இ-சோலந்த் கிராமங்கள், குல்காம் மாவட்டத்தின் தேவ்சர், புகாம், சோனிகாம், மன்ஸ் காம் கிராமங்கள், புல்வாமா மாவட்டத்தின் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. வடக்கு காஷ்மீரில் சோபோர், குப்வாரா மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடந்தது. மொத்தம் 32 இடங்களில் சோதனை நடைபெற்றது’’ என்று தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகளும், உள்ளூர் நபர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு உதவி செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தீவிரவாத சதி வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.