புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50), உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை (65) ஜெர்மனியில் மணந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர் தனது கணவர் லார்ஸ் பிரார்சன் என்பவரை விவாகரத்து செய்திருந்தார். அதன்பின் ஜெய் ஆனந்த் என்ற வழக்கறிஞருடன் தொடர்பில் இருந்தார். மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இ-மெயிலில், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினி என்பவரை கேள்வி எழுப்ப அனுமதித்து ஆதாயம் அடைந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதை ஜெய் ஆனந்த் அம்பலப்படுத்தியதால், எம்.பி பதவியை கடந்த 2023-ம் ஆண்டு இழந்தார் மஹுவா மொய்த்ரா. ஆனால் அடுத்த நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அவர் திரிணமூல் சார்பில் மீண்டும் போட்டியிட்டு எம்.பி.யானார்.
இவருக்கும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவுக்கும் ஜெர்மனியில் கடந்த மாதம் 30-ம் தேதி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதை மஹுவா மொய்த்ரா உறுதி செய்துள்ளார். இவர்கள் ஜோடியாக வரும் படமும் வெளியாகியுள்ளது.