சென்னை: கங்காதீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு புரசைவாக்கம் பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒருபகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது. வரலாற்றில் முதல்முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரு தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கங்காதீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, அழகப்பா மேல்நிலைப் பள்ளி, சென்னை மாநகராட்சி பள்ளி உட்பட 7 பள்ளிகளுக்கு மட்டும் இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக வரும் ஜூன் 21-ம் தேதி பள்ளிகள் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.