அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி கடந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. ராமர் கோயில் வளாகத்தில் மற்ற சன்னதிகளின் கட்டுமானம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்தப் பணிகள் நிறைவடைந்ததால், புதிதாக கட்டப்பட்ட சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை அபிஜித் முகூர்த்தத்தில் நடைபெற்றது. இதற்கான யாக பூஜைகள் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கின.
அதன்பின் அனைத்து சன்னதி களிலும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ராம் தர்பார், ஷேசாவதார், சிவன், விநாயகர், அனுமன், சூர்யா, பகவதி, அன்னபூர்ணா ஆகிய சிலைகள் அந்தந்த சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ராமர் கோயிலின் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பாரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். அதன்பின் அருகில் உள்ள அனுமன்கர்கி கோயிலில் வழிபட்டார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் யோகி ஆதித்யநாத் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ராமர் பிறந்த புனித இடமான அயோத்தியில், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் புதிய வெளிப்பாடாக இந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன’’ என தெரிவித்தார்.
பாஜக விடுத்துள்ள செய்தியில், ‘‘ராமர் கோயிலின் 2-வது பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. ராம ராஜ்ஜியத்தை நோக்கிச் செல்வதற்கு இது இன்னொரு வழி’’ என தெரிவித்துள்ளது. ராமர் கோயில் அறங்காவலர் அனில் மிஸ்ரா விடுத்துள்ள செய்தியில், ‘‘வேத பாரம்பரியம் அடிப்படையில், இந்த விழாக்கள் ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து வேதபண்டிதர்கள் பங்கேற்றனர்’’ என்றார்.