நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குமரியில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக இந்த படகுப் போக்குவரத்து அமைந்துள்ளது. சமீபத்தில் இவ்விரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்து, விவேகானந்தர் பாறையை அடைந்து அங்கு சுற்றிப்பார்த்த பின்னர், கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை அடைகின்றனர். இதற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. படகுப் போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், படகு சவாரிக்கான சாதாரணக் கட்டணம் ரூ.75 ல் இருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.300-ஆக நீடிக்கிறது. இந்த கட்டண உயர்வு நேற்று நடைமுறைக்கு வந்தது. இதற்கான அறிவிப்புப் பலகை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நுழைவு வாயிலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.
சாதாரண கட்டண உயர்வு மட்டுமே அதில் இடம்பெற்றிருந்தது. மாணவர்களுக்கான கட்டணம் ரூ.10 உயர்த்தியதற்கான போர்டு வைக்கப்படவில்லை. ஆனால், அக்கட்டணம் மறைமுகமாக நடைமுறைக்கு வந்தது. இந்த கட்டண உயர்வுக்கு, கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், சுற்றுலா ஆர்வலர்கள், பொதுநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.