வாஷிங்டன்: அமெரிக்கா – சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிவிதிப்பில் நியாயமாக இல்லை என குற்றம்சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்போவதாக கூறினார். சீனப் பொருட்களுக்கான வரியை அவர் 145 சதவீதமாக உயர்த்தினார். இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது.
இதனால் இரு நாடுகள் இடையே சுமூக உறவு பாதிப்படைந்தது. வரி உயர்வு காரணமாக இரு நாடுகளிலும் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வரியை குறைக்க கடந்த மாதம் 12-ம் தேதி இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
வரி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக 90 நாட்களுக்கு சீனப் பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிபர் ட்ரம்ப் குறைத்தார். சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்தது. ஆனாலும் இரு நாடுகள் இடையேயான மோதல் தொடர்ந்தது.
முக்கியமான கனிமங்களை சீனா ஏற்றுமதி செய்வதில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியது. நவீன கம்ப்யூட்டர் சிப் ஏற்றுமதிக்கு, சீன மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடு விதிப்பதற்கும், சீன அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்தன.
அமெரிக்கா – சீனா இடையேயான வேறுபாடுகளை கலைவதற்கும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நியாயமாக தொடங்கவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், ‘‘எனக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எப்போதும் பிடிக்கும். ஆனால், அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது’’ என கூறியிருந்தார். அவர் நேற்று சீன அதிபர் ஜின்பிங்கை போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால், வெள்ளை மாளிகை இது குறித்து இன்னும் தகவல் வெளியிடவில்லை.