வாஷிங்டன்: நாட்டு நலனுக்காக பணிபுரிவதை கட்சி விரோத செயல் என கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசி தரூர் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சனம் செய்திருப்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாட்டு நலனுக்காக பணி புரிவதை கட்சி விரோத செயல் என சிலர் கருதுகின்றனர். அவர்கள் நம்மைவிட தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்பதை நான் நேர்மையாக உணர்கிறேன். இந்த தருணத்தில் தனி நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் எங்கள் கவனம் இப்போது மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஒரு பிரச்சினையில் உள்ளது.
எனது நண்பர் (காங்கிரஸ் மூத்த தலைவர்) சல்மான் குர்ஷித் கூட சமீபத்தில், “இந்தியாவில் தேச பக்தராக இருப்பது அவ்வளவு கடினமா” என கேள்வி எழுப்பியதை நினைவுகூர்கிறேன்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவேனா என கேட்கிறீர்கள். நான் தேர்தலில் வென்று எம்.பி.யாகி உள்ளேன். என்னுடைய பதவிக் காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடைபெற்றபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.
இதுகுறித்த கேள்விக்கு சசி தரூர் கூறும்போது, “ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சாதாரணமானது. நாங்கள் ஒரு கட்சியின் அரசியல் நோக்கத்துக்காக இங்கு வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கு வந்துள்ளோம்” என்றார்.