சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை (ஜூன் 6-ம் தேதி) வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஜூன் 2-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளில், 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த இரு தினங்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாளை ஜூன் 6-ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பழனிசாமி ஆலோசனை: மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் 2 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ ம.தனபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அழைத்திருந்தார். அதன்படி, அவர் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, பழனிசாமி அறிவுறுத்தல்படி, வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பம் இட்டனர். இதனை அடுத்து, நாளை (ஜூன் 6) பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1:30 மணிக்குள் அதிமுக வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். அன்று அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் அடையாள அட்டையுடன் தலைமைச் செயலகம் வருமாறு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை அனைவரும் மனதில் கொள்ளுங்கள். மக்களிடமிருந்து ஒருவர் மீதும் புகார் வராத அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மக்களின் புகார்களை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். ஒருசில மாதங்களில் அதற்கான அறிவிப்பு வரும். அப்போது உங்களை தொகுதியில் சந்திக்கிறேன்.
மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து, வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர் நியமனத்தில் எம்எல்ஏக்களும் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். இப்போது பாஜகவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமையும். 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும். அதனால் எம்எல்ஏக்கள் அனைவரும், அவரவர் தொகுதியில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.