சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்படும் என்பதால் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர்களின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என கடந்தாண்டு செப்.8-ல் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் விஷால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நடிகர் சங்கத்துக்கு ரூ.25 கோடி செலவில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. தங்களது பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது என்றாலும், 2025 – 2028 காலகட்டத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை தொடங்கினால் அது சங்க கட்டுமானப்பணிகளை பாதிக்கும்.
எனவே சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஏகமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. இதில் எந்த வொரு விதிமீறலும் இல்லை. அதற்கான ஆவணம் முறைப்படி பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். அதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி கே.குமரேஷ்பாபு ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.