ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா துவங்கியது. முதல் நாள் ராவண வதம் நிகழ்ச்சியும், இரண்டாவது நாளான புதன்கிழமை விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்றாம் நாளான வியாழக்கிழமை ராமலிங்கப் பிரதிஷ்டையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 4 மணி முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் காலை நேரப் பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன.
ராமேசுவரம் ராமதீர்த்தம் கோயிலிலிருந்து ராமர், சீதை, லெட்சுமணர், ஆஞ்சநேயர், ஆகியோர் தங்கக் கேடயத்திலும், சுவாமி விபீஷணர் வெள்ளிக் கேடயத்திலும் புறப்பாடாகி நான்குவீதிகளில் உலா வந்து திருக்கோயிலுக்குப் பகல் 12.15 மணிக்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதியில் ஆஞ்சநேயர் லிங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் வேடமிட்டு லிங்கத்துடன் ராமநாதசுவாமி சன்னதியை 3 முறை வலம் வந்து பின்னர் சுவாமி கருவறையில் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னர் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.