சென்னை: மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: “எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர். தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர். தலைவர் கலைஞரின் மீது அன்பைப் பொழிந்தவர். 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணை நின்றவர்.
நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் பிறந்தநாள். காயிதே மில்லத் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: “இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 130-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்னைத் தமிழை தேசிய ஆட்சிமொழியாக அரியணை ஏற்றவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வோம். அவர் விரும்பியவாறு அன்னைத் தமிழுக்கு அரியணை பெற்றுத் தரவும், மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் இந்த நாளில் உறுதியேற்போம்.” என்று அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்: தவெக தலைவர் விஜய், “தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் , சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்த நாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.