சென்னை: திருவொற்றியூர் ஐடிஐயில் இயந்திரவியல் டெக்னீசியன், ஒயர்மேன், வெல்டர் தொழில் பிரிவுகளுக்கு வரும் ஜூன் 13-ம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), 2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 2 ஆண்டு தொழில் பிரிவுகளான இயந்திரவியல் டெக்னீசியன், ஒயர்மேன் மற்றும் ஓராண்டு தொழில் பிரிவுகளான தானியங்கி உற்பத்தி, இன்பிளான்ட் லாஜிஸ்டிக்ஸ், வெல்டர் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
10, 12-ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிப்ளமோ, கலை அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் திருவொற்றியூர் ஐடிஐ-க்கு நேரில் வந்தோ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பங்களை பெற்று வரும் ஜூன் 13-ம் தேதிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வெல்டர் மற்றும் ஒயர்மேன் தொழிற்பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிகள் முடிந்தவுடன் நேர்காணல் நடத்தப்பட்டு தொழில் நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியின்போது மாணவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.750, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000, பாடப் புத்தகங்கள், பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களைப் பெற 9566891187, 8946017811 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.