சென்னை: கூட்டுறவு வங்கி அல்லது சங்கங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையின் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
கூட்டுறவுத் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து, விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறது.
கூட்டுறவுத் துறையின் மூலம் பயிர்க் கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகைக் கடனுதவி, சுயஉதவிக் குழு கடனுதவி, சிறு வணிக கடனுதவி, மகளிர் தொழில்முனைவோர் கடனுதவி, பணிபுரியும் மகளிர் கடனுதவி, ஆதரவற்ற பெண்களுக்கான கடனுதவி, மத்திய கால கடனுதவிகள், பண்ணை சாரா கடனுதவிகள், தானிய ஈட்டு கடனுதவிகள், டாப்செட்கோ கடனுதவிகள், காலி வீட்டுமனை வாங்க கடனுதவிகள் மற்றும் இதர கடனுதவிகள் என மொத்தம் 34 வகையான கடனுதவிகள் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாகவும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக, நலிவடைந்த பிரிவினருக்கு கைகொடுத்து தூக்கி விடும் துறையாகவும் கூட்டுறவுத் துறை விளங்கி வருகிறது. கடனாளிகளின் நிதிச் சுமையை குறைத்திடும் வகையில், கூட்டுறவு வங்கி அல்லது சங்கங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூல் செய்ய தமிழக அரசால் சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகர் பகுதியில் இயங்கி வரும் 200 பேருந்துகளில் கூட்டுறவு சேவைகள் குறித்து விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழச்சியில், துறையின் செயலர் சத்யபிரதா சாஹூ, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.