காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ( ஜூன் 4-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பகுதியில் நிரந்தர ரயில்வே வழிப்பிரிவுகளில் 26 ரயில்வே கேட்கள் உள்ளன. அதில் பணி செய்யும் கேட் பாதுகாவலர்கள் வாரத்துக்கு 72 மணி நேரம் பணி செய்யும் நிலை உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து பிரிவில் (ரயில் நிலையத்துக்கு 1 கி.மீ அருகில் உள்ள ரயில்வே கேட்) பணி செய்பவர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்கின்றனர்.
இதேபோல் ரயில்வே கேட் பாதுகாவலர்களுக்கு கழிப்பிடம், தண்ணீர் வசதியும் இல்லை. அவர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலையே உறுதிப்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகளை செய்தர வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள முதுநிலை பகுதி பொறியாளர் நிரந்தர வழி பிரிவு அலுலலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ கிளை தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். சென்னை கோட்ட துணைத் தலைவர் அப்துல் அபீஸ், துணைத் செயலர்கள் சிலம்பரசன், ஆனந்த முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினை இருப்பதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.