விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் கொள்ளை வழக்கில் கூடுதலாக 20 பக்க குற்றப்பத்திரிகை இன்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி இயங்கியது. இக்குவாரியில் திமுக ஆட்சியில் (2006-11), விதிகளை மீறி 2 லட்சத்துக்கு 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் கொள்ளை போனது. இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்துக்கு 40 ஆயிரத்து 600 ரூபாயை இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகனான முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி மற்றும் ஆதரவாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லோகநாதன், உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அரசு தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் பிறழ் சாட்சியாக மாறினர். இந்நிலையில், மாவட்ட அமர்வு நீதிபதி மணிமொழி முன்னிலையில் செம்மண் கொள்ளை வழக்கு இன்று (ஜூன் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம் ஆகிய 3 பேர் ஆஜராகினர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின்போது, அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே 20 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஏற்கெனவே 67 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 4 பேரை சாட்சிகளாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதி ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.