புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக ஜாமீன் பெறவோ அல்லது சிறையில் இருந்து விடுதலை பெறவோ முடியாத ஏழை கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்தாதது கவலை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்கள்/சிறைத்துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் நடத்தப்பட்ட பல காணொளி மாநாடுகளின் போது, ஏழைக் கைதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழை கைதிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் தொடர்பாக பலமுறை குறிப்பிட்டும் பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தகுதியான கைதிகளை அடையாளம் காணவில்லை. அவர்களுக்கு திட்டத்தின் பலனை வழங்கவில்லை. இதனால், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நிதியைப் பயன்படுத்தியிருந்தாலும், திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மிகவும் சுமாராகவே உள்ளது. இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது ஏழை கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கும் பங்களிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏழை கைதிகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘அதிகாரமளிக்கப்பட்ட குழு’ மற்றும் மாநில தலைமையக மட்டத்தில் ஒரு ‘மேற்பார்வை குழு’ ஆகியவற்றை அமைக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தகுதியுள்ள கைதிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு இந்தக் குழுக்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த திட்டத்தின்படி, ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் விசாரணைக் கைதி சிறையில் இருந்து விடுவிக்கப்படாவிட்டால், சிறை அதிகாரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (DLSA) செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் ஜாமீன் பெறுவதற்கு நிதி உத்தரவாதம் அளிக்கும் நிலையில் கைதி இல்லையா என்பதை விசாரிக்க வேண்டும். அத்தகைய வழக்குகளை ஆய்வு செய்த பிறகு, அதிகாரமளிக்கப்பட்ட குழு, இந்தத் திட்டத்தின் கீழ் கைதிக்கும் ஒரு வழக்குக்கு ₹40,000 வரை நிவாரணம் வழங்க பரிந்துரைக்க முடியும்.
எனினும், ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், போதைப்பொருள் தடுப்புச் சட்டம், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டம் அல்லது விதிகளின் கீழ் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.