சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை மூலம் குற்றவாளி ஞானசேகரின் செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று, யார் அந்த ‘சார்’ என்பதை கண்டறிந்து அதிமுக, பாஜக கட்சிகளே வெளியிட வேண்டியது தானே என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகும்கூட யார் அந்த ‘சார்’ என தொடர்ந்து அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பதிவெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலே.
உண்மையிலேயே இவ்வழக்கில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சந்தேகம் இருந்தால், தொலைத்தொடர்பு துறையை அணுகி, குற்றவாளி ஞானசேகரனுக்கு வந்த செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று அதை வெளியிடலாமே. அந்த பட்டியலை பெற்று வெளியிட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தெரியாதா, அதன்மூலம் ஞானசேகரன் அழைத்த ‘சார்’ யார் என கண்டறிந்து வெளியிட வேண்டியது தானே. அதைவிடுத்து மக்களை ஏமாற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இவ்வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறது. எனவே இவர்களின் ஏமாற்று அரசியல் எல்லாம் மக்களிடம் எடுபடாது.
அதேபோல் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறுமா என்பது குறித்து இண்டியா கூட்டணி தலைவர் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். கூட்டணிக்காக தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. முதல்வர் எடுக்கும் முடிவை காங்கிரஸ் வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.