சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் இது தெளிவாக தெரியும். 2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், குறிப்பாக ரவுடி, பழிவாங்கும், சாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன.
2025-ம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான கொலைகள் பதிவாகியுள்ளன. இதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை.
உளவுத் துறையின் தோல்வி மற்றும் சில முக்கிய வழக்குகளில் அரசியல் தாக்கம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை. ஒரு சில தனிப்பட்ட சம்பவங்களை உளவுத்துறை தோல்வியாகக் கூறுவதில் நியாயம் இல்லை. அதற்கு பதிலாக, அந்த வழக்குகளை காவல்துறை எவ்வாறு கையாள்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பல முக்கிய வழக்குகளில், காவல் துறையின் நேர்மையான நடவடிக்கையால் தீர்ப்புகள் கிடைத்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை. இதேபோல், போலியாக என்கவுண்டர்கள் நடத்தப்படுவது இல்லை. காவல் துறை சட்டப்படி, கடுமையான சூழ்நிலையில்தான் தற்காப்புக்காக இதுபோன்று செய்கிறது. போதை மற்றும் மயக்கப் பொருள் விநியோகத்தையும், தேவையையும் கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கள்ளச்சாராய சம்பவம் குறித்த குற்றச்சாட்டுக்கு, இரண்டு கள்ளச்சாராய சம்பவங்கள் நடந்தது உண்மைதான். ஆனால் இரண்டும் மெத்தனாலால் ஏற்பட்டவையே. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நீடித்த மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், உண்மையைச் சரிபார்த்து உரிய ஆதாரங்களைப் பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.