தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜூன் 2) தொடங்கி வைத்தார்.
2025–2026-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, ‘சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூன் 2) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் சி.பழனி முன்னிலை வகித்தார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளின் தாய்மாரிடம் காய்ச்சிய பால் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2025–2026-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும் என அறிவித்தோம். அதனை தற்போது திருச்செந்தூரில் தொடங்கி வைத்தோம்.
இத்திட்டமானது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பன்னாரி மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆகிய இடங்களில் இன்று முதல் செயல்படுத்தப்பட்டு, காய்ச்சிய பால் வழங்கப்படுகிறது.
இதற்கான செலவு ரூ.50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தரிசனத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பெற்றோருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் பேருதவியாக இருக்கும். இதனை தொடங்கி வைத்த பின்னர் திருக்கோயிலில் அனைத்து பக்தர்களும் தெரிவித்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள், பக்தர்களுக்கு இதுபோன்ற நலப்பணிகளையும், வசதிகளையும் தொடர்ந்து செய்து தருவதற்கு ஓர் ஊக்கமாக இருக்கிறது” என்று அமைச்சர் கூறினார்.
குடமுழுக்கு விழா: தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியரோடு நேற்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை ஆய்வு செய்தோம். திருக்கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், குடமுழுக்கின் போது பக்தர்களுக்கு செய்து தரவேண்டிய வசதிகள் ஆகியவற்றை பக்தர்கள் கூட்டம் இல்லாத போது ஆய்வு செய்தால் தான் முழுமையாக கண்டறிய முடியும் என்பதால் தான் இரவு நேரத்தில் ஆய்வு செய்தோம்.
இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளான முடிக்காணிக்கை மண்டபம், நாழிக்கிணறு செல்லும் பாதை, அறுபடை வீடுகளை ஒன்றாக ஒரே நேரத்தில் தரிசிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பக்தர்களுக்கான வரிசை முறை, அங்குள்ள குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், விழாக் காலங்களில் சுமார் 20 ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்காக 4 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தோம்.
வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கு தகுந்தாற்போல பக்தர்களுக்கு தேவையான உணவு வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதி போன்ற வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம்.
திருக்கோயிலுக்கு வருகின்ற சாலைகளில் இருக்கின்ற பழுதுகளை குடமுழுக்கு விழாவுக்கு முன்னதாகவே சரி செய்திடவும், தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் நெடுஞ்சாலைத் துறையினர் உறுதியளித்துள்ளனர். இத்திருக்கோயிலின் குடமுழுக்கு கடந்த முறை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. தற்போது அவரது வழிதோன்றல் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் மீண்டும் இத்திருக் கோயிலுக்கு குடமுழுக்கு மிக சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கு முன் மற்றும் பின் முடிக்கப்பட வேண்டிய பணிகள் எவை எவையென பட்டியலிட்டு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக திருக்கோயிலுக்கு வருகின்ற பாதைகளில் நடைபெறுகின்ற பணிகள் குடமுழுக்குக்கு முன் முழுமையாக நிறைவு செய்யப்படும்.
இதரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவுப் படுத்திட உள்ளோம். வார இறுதி நாட்கள், சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த நாட்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதியை அதிகப் படுத்திடவும் அறிவுரைகள் வழங்கி உள்ளோம். திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்கள் என அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
எனவே, குடமுழுக்குக்கு முன்னதாக குறைந்தபட்சம் நான்கு முறையாவது முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்திட திட்டமிட்டுள்ளோம். இத்திருக்கோயில் குடமுழுக்கு செம்மையாக, நேர்த்தியாக, எங்கு பார்த்தாலும் அரோகரா என்ற கோஷம் எழும் அளவுக்கு சீரோடும், சிறப்போடும் நடைபெறும் என அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் எம்.அன்புமணி, எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் தக்கார் ஆர்.அருள் முருகன், கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.