தமிழ் சினிமாவில் சமூக திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளி வந்து கொண்டிருந்தாலும் 1960 மற்றும் 1970-களில் ஏராளமான புராண மற்றும் பக்தி படங்களும் வெளியாகின. இயக்குநர் ஏ.பி.நாகராஜன், தொடர்ந்து இதுபோன்ற படங்களில் அதிக ஆர்வம் காட்டினார்.
திருவிளையாடல், திருமால் பெருமை, சரஸ்வதி சபதம், அருட்பெருஞ்சோதி, அகத்தியர் என பல திரைப்படங்கள் உருவாகின. அதில் ஒன்று, ‘திருநீலகண்டர்’. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை சொன்ன படம் அது.
சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் திருநீலகண்டர். மனைவியுடன் வாழ்ந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் சிற்றின்ப மோகம் காரணமாகத் தவறான பாதைக்குச் செல்கிறார். இதை அறிந்த அவருடைய மனைவி கணவரிடம் கோபம் கொண்டு, இனி தன்னைத் தொடக்கூடாது என்று கூறிவிடுகிறார். தனது தவறை உணர்ந்த நீலகண்டர், மற்ற பெண்களை மனதாலும் நினைக்க மாட்டேன் என்று சிவபெருமான் மீது ஆணையிட்டு, முனிவரைப் போல வாழ்கிறார்.
வருடங்கள் ஓடியதும் இருவரும் முதுமை அடைந்தனர். சிவபெருமான், நீலகண்டரின் பெருமையையும் திறத்தையும் உலகுக்கு உணர்த்த நினைக்கிறார். அதற்காக தமது கோலத்தை மாற்றி, திருவிளையாடலைத் தொடங்கினார்.
திருவோடு தூக்கி நீலகண்டரின் சிறுவீட்டை அடைகிறார். நீலகண்டரும் அவர் மனைவியும் அவரை வரவேற்று முறைப்படி வழிபட்டனர். பின் தன் கையிலிருந்த திருவோட்டைக் காண்பித்து, ‘அபார சக்தி வாய்ந்த இத் திருவோட்டை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தரவேண்டும்’ என்கிறார். அதை வாங்கி பத்திரமாக வைக்கிறார் நீலகண்டர். சில காலத்துக்குப் பின் அவர் வந்து கேட்கும்போது, அதைக் காணவில்லை.
கோபமாகிறார், சிவனடியார். ஆசையால், திருவோட்டை திருடிவிட்டாய் என்கிறார். மறுக்கிறார் அவர். அப்படியென்றால் உன் மனைவியின் கையைப் பற்றி பொற்றாமரை குளத்தில் மூழ்கி உண்மையை நிலை நாட்டு என்கிறார். மனைவிக்கும் தமக்குமான பிரச்சினையை சொல்ல முடியாத நிலையில், அது முடியாது என்கிறார். பிறகு, வழக்கு மன்றத்துக்கு இழுத்துச் செல்கிறார் சிவனடியார். அங்கும் அதே தீர்ப்புக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஒரு கழியில் ஒரு பக்கத்தை அவரும் மறு பக்கத்தை அவர் மனைவியும் பிடித்துக்கொண்டு குளத்தில் முங்குகிறார்கள். இறைவன் அருளால் அவர்கள் முதுமை நீங்கி இளமையுடன் வருவது கதை.
இந்தக் கதையை கண்ணதாசனும், பஞ்சு அருணாசலமும் திரைக்கதை ஆக்கினார்கள். சி.பி.ஜம்புலிங்கம் என்ற ஜம்பு இயக்கினார். திருநீலகண்டராக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவர் மனைவி நீலாவதியாக சவுகார் ஜானகியும், கலாவதியாக எம்.பானுமதியும் நடித்தனர். சிவபெருமானாகவும், நீலகண்டரிடம் திருவோடு தரும் சிவனடியாராகவும் ஆர்.எஸ்.மனோகர், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். காந்திமதி, சுருளிராஜன், புஷ்பமாலா, உசிலமணி, எஸ்.டி.சுப்புலட்சுமி என பலர் நடித்தனர். சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். கண்ணதாசனும் பஞ்சு அருணாச்சலமும் பாடல்களை எழுதினர். 1972-ம் ஆண்டு ஜுன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.