சென்னை: கடலூர் அஞ்சலையம்மாளை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப் படும் நிலையில், அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம். அன்னையாருக்கு எனது வணக்கங்களை செலுத்துகிறேன்.
இந்தியாவில் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வீரத்திற்கு சொந்தக்காரர் அஞ்சலையம்மாள். கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக் கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளி வந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக் குழந்தையுடன் சிறைக்கு சென்றவர்; தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தியடிகளால் பட்டம் வழங்கப்பட்டவர்; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.
இத்தனை பெருமைகள் கொண்ட அஞ்சலையம்மாளின் தியாகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. சென்னையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் அலங்கார ஊர்தியில் கூட அஞ்சலைம்மாளின் உருவச் சிலையை வைக்காமல் அவமதித்தது தமிழக அரசு; பாமக சார்பில் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு தான் அம்மையாரின் சிலை சேர்க்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துறைமுகம் ஆகியவற்றுக்கு அஞ்சலையம்மாளின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.
கடலூர் அஞ்சலையம்மாளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.