சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூ ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று நடைபெற்றது.
இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்தீஸ்வரன், பொதுச்செயலாளர் அகிலன், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் சக்திகுமார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2009-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணை 354 மறுசீராய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3,000 உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆணை 4 (D) மூலம் நீக்கப்பட்ட 1,500 -க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் அரசு மருத்துவர்களின் குரலுக்கு செவி மடுத்து, தமிழக முதல்வர் உடனடியாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.