வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவுக்கு தங்க கீரிட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மே மாதம் மாதாவுக்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மே 6-ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் வேளாங்கண்ணி பழைய மாதா ஆலயத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மாதாவுக்கு தங்க கிரீட முடிசூட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்த மாதாவின் சொரூபத்துக்கு ஆயர் சகாயராஜ், தங்க கிரீடத்தை கொண்டு முடி சூட்டினார். தொடர்ந்து, தேர்பவனி நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏந்தி கலந்துகொண்டனர்.