தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் நாளை (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன.
தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.7 முதல் 17-ம் தேதி வரையும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8 முதல் 24-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் மாணவர்கள் நலனுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருட்களும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையை கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2025-26) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.