சென்னை: நாளை (மே 31) ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவள்ளுவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடத்துநராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2018-ம் ஆண்டு டிக்கெட் பரிசோதகர் பதவி உயர்வுக்கான பட்டியலில் என்னை விட ஜூனியரின் பெயர் எனக்கு முன்பாக இருந்தது. இதுதொடர்பாக புகார் அளித்ததால் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் எனக்கு டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பணிமனை மேலாளரான சீனிவாசன், அப்போது அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளராக பணியாற்றிய பொன்முடி எனக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நேர கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய என்னை மேலாளர் புதுச்சேரி பணிமனைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.
அங்கு எனக்கு எந்த பணியும் ஒதுக்காமல் அலைக்கழிப்பு செய்தனர். இந்நிலையில் கடந்த 2018 செப்.21 முதல் 2019 மார்ச் 2 வரை பணிக்கு வரவில்லை என என்மீது குற்றம் சாட்டியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியில் சேர்ந்தேன். இந்நிலையில் அப்போது பொதுமேலாளராக பணியாற்றிய பொன்முடி தற்போது அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநராக பணியாற்றி மே 31-ம் தேதியுடன் (சனிக்கிழமை) ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதிய பலன்களை வழங்காத நிலையில், இவருக்கு மட்டும் ஓய்வு பெற்ற மறுநாளே ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் உடனடியாக கிடைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். எனவே ஊழல் புகாரில் சிக்கியுள்ள இந்த அதிகாரி மீதான லஞ்ச புகார் குறித்த விசாரணை முடிவுக்கு வரும் வரவில்லை. எனவே, அவருடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். பாலமுகி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.