“நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன்” என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். அவருடைய மகள் திவ்யா சத்யராஜ் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து, தற்போது திமுக கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்தச் சூழலில், அவர் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு கவனம் ஈர்த்துள்ளது, அதில், “நான் அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் கெஞ்சி, அழுதே அவர்களை சமாதானப்படுத்த முடிந்தது.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அழுத்தம் காரணமாக தங்களுடைய காதலை பிரிந்து செல்லும் பல ஆண்களையும், பெண்களையும் காண்கிறேன். தயவுசெய்து உங்கள் காதலுக்காகப் போராடுங்கள். அது ஒரு நபர் அல்லது ஒரு தொழில் மீதான உங்கள் அன்பாக இருக்கலாம். ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் விரும்புவதை பெற்றே ஆக வேண்டும்.
ஓர் அரசியல்வாதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திமுக பெண்களை மதிக்கும் கட்சி. நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன். ஒரு பொது ஊழியராக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுடன் இருக்கிறேன்” என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.