புதுடெல்லி: ‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பண்டிட் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தில் அவருக்கு எனது பணிவான புகழஞ்சலியை செலுத்துகிறேன். வலுவான மற்றும் ஒங்கிணைந்த இந்தியா என்ற கணவுடன், நேரு தனது தொலைநோக்கு தலைமையால் சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டார். சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியல்சாசனம் மற்றும் ஜனநாயகத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு மிக அதிகம். அவரது பாரம்பரியம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் நம்மை எப்போதும் வழிநடத்தும். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ நவீன இந்தியாவை உருவாக்கியவரும், ஜனநாயகத்தின் பாதுகாவலரும், அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை என பல துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியவரும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வலியுறுத்திவரும், நமக்கு உத்வேகமாகவும் இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு எனது பணிவான புகழஞ்சலி’’ என குறிப்பிட்டுள்ளார்.