சென்னை: துணைத் தேர்வு எழுதும் மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி வெளியிட்ட அறிக்கையில், “பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது ஆசிரியர்கள் மூலம் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு 90 சதவீதம் பேர் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
அதேநேரம் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சுமார் 30,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இதில் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கே வராத மாணவர்கள் பலர் உள்ளனர். இந்த மாணவர்களை தொடர்புக் கொள்வதும், அவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க வைப்பதிலும் பல்வேறு இடர்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதுதவிர துணைத் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக எடுத்து அனைவருக்கும் தலைமை ஆசிரியர்களையே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டுமென வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை போல மாணவர் நலன் கருதி துணைத் தேர்வுக்கான கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்த முன்வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.